
கிள்ளான், பிப்ரவரி-5-மலேசிய வரலாற்றில் புதிய சாதனையை படைத்த முன்னாள் கைதியான, Dr Malik Yatam, நேற்று சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah அவர்களை நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றார்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு உணர்ச்சி நிறைந்த சூழலில் நடைபெற்றது; ஒரு கட்டத்தில் நெகிழ்ச்சியின் மிகுதியில் Dr Malik, சுல்தானை ஆரத்தழுவி கண்ணீர் விட்டார்.
தம்மிடமிருந்து முழு அரச மன்னிப்பு பெற்ற முன்னாள் கைதியொருவரை சிலாங்கூர் சுல்தான் நேரில் சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.
Dr Malik, சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்த காலத்தில் படித்து முனைவர் பட்டம் பெற்ற மலேசியாவின் முதல் நபர் ஆவார்.
அவர் 24 ஆண்டுகள் ‘தடையில்லா அரச தண்டனை’யை அனுபவித்து, 2024 டிசம்பர் 11-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
14 வயதில் தண்டனை அனுபவிக்கத் தொடங்கிய Malik, காஜாங் சிறையில் கல்வி பயின்று, தற்றோது 39 வயதில் வணிக நிர்வாகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, சிறையிலிருந்து வெளியான பிறகான அவரது வாழ்க்கை முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து சுல்தான் விசாரித்தார்.
Dr Malik-கின் வாழ்க்கைப் பயணத்தால் மனமகிழ்ந்த சுல்தான், அவருக்கு இரண்டாவது வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கருத்து தெரிவித்தார்.
மேலும், குடும்பத்தின் நற்பெயரைக் காக்கவும், வாழ்க்கையை மேம்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யவும் சுல்தான் அறிவுறுத்தினார்.



