Latestமலேசியா

துன் மஹாதிரின் இழிவான கருத்துகளை சாடினார் அன்வார்

செர்டாங், ஜனவரி 16 – மலேசிய இந்தியர்கள் மற்றும் சீனர்கள் நாட்டின் மீது கொண்டுள்ள விசுவாசம் குறித்து, அண்மையில் கேள்வி எழுப்பி இருந்த துன் டாக்டர் மஹாதீரின் செயலை, ஒற்றுமை அரசாங்கம் இன்று வன்மையாக கண்டித்தது.

சென்னையை தளமாக கொண்ட தந்தி டிவிக்கு வழங்கிய நேர்காணலின் போது துன் மஹாதீர் கூறிய கருத்துக்கள், நாட்டின் பிரதமராக இருமுறை பணியாற்றிய ஒரு அரசியல் தலைவரின் கொஞ்சமும் பொறுப்பற்ற செயல் என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.

அதே சமயம், ஊழலை வேரறுக்க நடப்பு அரசாங்கம் தற்சமயம் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் இருந்து, மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் ஒரு செயல் அதுவென தாம் நம்புவதாகவும் அன்வார் சொன்னார்.

அவரது கூற்றுகள் பொருத்தமற்றது. நாட்டின் சிறுபான்மை மக்களாக இருந்தாலும் சரி, பெரும்பான்மை மக்களாக இருந்தாலும் சரி, துன் மஹாதீர் அவ்வாறு யாரையும் அவமதித்து பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என அன்வார் குறிப்பிட்டார்.

மலாய்க்காரர்களை சோம்பேறிகள் எனவும், இந்தியர்களையும், சீனர்களையும் விசுவாசம் இல்லாதவர்கள் எனவும் அவர் கூறியிருப்பது ஒன்றும் புதிதல்ல.

எனவே, மலேசியர்கள் ஒற்றுமையை வலுப்படுத்திக் கொள்வதோடு, ஒருவருக்கொருவர் மதிப்பளித்து சகோதரத்துவத்தை மேம்படுத்திக் கொள்ள அன்வார் அழைப்பு விடுத்தார்.

பொதுவான இலக்கை நோக்கி, ஒன்றிணைந்து செயல்படுவோம். அதே சமயம், காலாவதியான அல்லது பழைய கொள்கைகளை கொண்டிருக்கும் தலைவர்களை, மக்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் புறக்கணிக்க வேண்டுமெனவும் பிரதமர் கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, அண்மையில் தந்தி டிவிக்கு வழங்கிய நேர்காணலின் போது, மலேசிய இந்தியர்களும், சீனர்களும் அவர்களின் பூர்வீக நாடுகளுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புவதால், அவர்கள் மலேசியாவுக்கு முழுமையாக விசுவாசமாக இல்லை எனவும் ; அவர்கள் தங்களை இந்தியர்கள் மற்றும் சீனர்களாக கருதுவதால், உள்நாட்டு மொழியில் பேசுவதில்லை எனவும் மஹாதீர் குற்றம்சாட்டியது, பல்வேறு தரப்பினரின் கடும் கண்டனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!