Latestமலேசியா

தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் கடவுள், தமிழ் வாழ்த்துகளுக்கு தடை விதிப்பதா? – ம.இ.கா கண்டனம்

ஜோர்ஜ் டவுன், நவ 24 – பினாங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்துக்கு தடை விதிக்கப்பட்டதை ம.இ.கா கடுமையாக கண்டனம் செய்துள்ளது. பினாங்கு கெபாலா பத்தாஸில் (Kepala Batas) இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றது. தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் எந்தவொரு விழாவிலும் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்து பாடல்கள் காலம் காலமாக பாடப்பட்டு வருவது வழக்கமான ஒன்றாகும். உண்மையில் இந்த பாடல்களில் கடவுள் தொடர்புடையை வரிகளைக் காட்டிலும் தமிழ் மொழியின் மாண்பு மற்றும் அதன் இலக்கிய பெருமைகைளுக்கு முக்கியத்துவம் கொண்டிருக்கும் அம்சங்களை கொண்டிருக்கும்.

தமிழ்ப்பள்ளிகளில் படைக்கப்படும் நிகழ்வுகளில் தேசீய கீதம் மற்றும் மாநில கீதங்களுக்கு அடுத்து கடவுள் வாழ்த்தும், தமிழ் வாழ்த்தும் இடம்பெறுவது மரபாக இருந்து வந்தது. அப்படியிருக்கும்போது செந்தமிழ் விழாவில் அந்த இரு பாடல்களும் பாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக பினாங்கு ம.இ.கா தொடர்பு குழுவின் தலைவரும் ம.இ. கா மத்திய செயலலை உறுப்பினருமான டத்தோ தினகரன் ஜெயபாலன் தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்வின் பதாகைகளில் திருவள்ளுவர் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அந்த பதாகைகளையும் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது எந்த வகையில் நியாயம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த தடை ஒட்டுமொத்தமாகவே அனைத்து இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்திற்கு பினாங்கு மாநில கல்வி இலாகாவுக்கு தொடர்பு இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்திய சமூகத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும் இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் பாட்லினா சிடேக் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தினகரன் தெரிவித்தார். தமிழ் மொழி தொடர்பான நிகழ்வில் இந்திய சமூகம் மற்றும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்பதறகு உத்தரவாதத்தையும் உறுதியையும் கல்வியமைச்சு வழங்க வேண்டும் என்றும் டத்தோ தினகரன் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!