Latestஉலகம்

தொடர்ச்சியான சிக்கல்கள் ; பதவி விலகினார் போயிங் தலைமை நிர்வாக அதிகாரி

நியூயார்க், மார்ச் 26 – தொடர்ச்சியான பாதுகாப்புச் சம்பவங்கள் மற்றும் உற்பத்திச் சிக்கல்களைத் தொடர்ந்து, அதன் தலைமை நிர்வாக அதிகாரி டேவ் கால்ஹவுன் பதவி விலகுவதாக, போயிங் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம், நடுவானில் பறந்து கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ்யின், போயிங் 737 மேக்ஸ் 9 ஜெட் விமானத்தின், கதவு கழன்றது உள்ளிட்ட சிக்கல்களால் அந்நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது.

அச்சம்பவத்தில் பயணிகள் யாரும் காயமடையவில்லை என்றாலும், விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, தரக் கட்டுப்பாட்டுச் சிக்கல்களை தீர்ப்பதற்கான திட்டத்தை முன் வைக்க, அமெரிக்க வான் போக்குவரத்து அதிகாரிகள் போயிங்கிற்கு 90 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளனர்.

அதே போல, கடந்த ஜனவரியில், புளோரிடாவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், போயிங் 747 ரக விமானத்தின் இயந்திரத்தில் தீ ஏற்பட்டது.

இம்மாத தொடக்கத்திலும், ஜப்பானுக்கு பயணமான போயிங் 777 விமானம், சான் பிரான்சிஸ்கோவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அதன் ஒரு சக்கரம், விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்தில் விழுந்ததில், கார்கள் பல சேதமடைந்தன.

ஆகக் கடைசியாக, கடந்த வாரம், சிட்னியில் இருந்து ஆக்லாந்திற்கு செல்லும் போது, போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று திடீரென வானில் பறக்க உயரம் குறைந்ததால், குலுங்கி பயணிகள் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பில், நியூசிலாந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!