Latestமலேசியா

தொழிலாளர் சட்டங்களை மீறும் முதலாளிகள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த தடை – ரமணன்

கோலாலம்பூர், மார்ச் -3-தொழிலாளர் சட்ட விதிமீறல்கள், நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றத் தவறுதல் அல்லது கட்டாய உழைப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற முதலாளிகள், இனி வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தொழிலாளர்கள் சுரண்டப்படுவதை, குறிப்பாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுவினரின் கடப்பிதழ்களை முடக்கி வைப்பது, ஊதியம் வழங்காமல் இருப்பது போன்ற செயல்களை அரசாங்கம் மிகவும் தீவிரமாக கருதுவதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இத்தகைய நடைமுறைகளை ஒழிக்க, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்குத் தனது அமைச்சகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக, 1955-ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டத்தின் (சட்டம் 265) பிரிவு 60K-இன் கீழ், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான கடுமையான நிபந்தனைகளை அரசாங்கம் விதித்துள்ளது.

இதில் சட்ட விதிகளை மீறும் முதலாளிகள் மீது வழக்குத் தொடருவதும் அடங்கும். மேலும், தொழிலாளர் துறையின் மூலம் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகள் வாயிலாக அமலாக்கம் பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, தவறு செய்பவர்களுக்கு எதிராகத் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுக்கவும், குறிப்பாக அடையாள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்படுவது மற்றும் ஊதிய நிலுவை போன்ற சிக்கல்களைக் களையவும் அமைச்சகம் எடுத்துள்ள தற்போதைய நடவடிக்கைகள் குறித்து செலாயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வித இடைத்தரகர்களும் இன்றி நேரடியாகத் தொழிலாளர் துறையிடம் புகார் அளிக்கும் வகையில், ‘e-Aduan’ எனும் எளிதான புகார் செயலியை அரசாங்கம் வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

சமூகப் பாதுகாப்பு அம்சத்தைப் பொறுத்தவரை, 1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின் (சட்டம் 4) கீழ், வேலைக்கால விபத்துகள், ஊனம், மரணம் போன்றவற்றுக்கு விரிவான பாதுகாப்பு வழங்கும் திட்டங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பு முறையை ஒழிப்பதற்கான தேசிய செயல் திட்டத்தை (2021–2025) அமைச்சகம் செயல்படுத்தி வருவதாகவும், இது தடுப்பு, பாதுகாப்பு மற்றும் வழக்குத் தொடர்தல் ஆகியவற்றின் மூலம் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

தொழில்துறையில் வெளிநாட்டு ஊழியர்களின் தேவை வணிகத் தொடர்ச்சியை உறுதிப்படுத்தும் அதே வேளையில், உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்தல், தொழிலாளர் சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கல் மற்றும் தேவை (Supply and Demand) கோட்பாட்டின் படியே இது அமையும் என்றும் அமைச்சர் ரமணன் மேலும் தெரிவித்தார்.

 

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!