தம்பின், ஆகஸ்ட்-5, நெகிரி செம்பிலான் கெமென்ச்சேவில் (Gemencheh) நன்கு அறிமுகமான 2 ஆடவர்களுக்கிடையில் வேலைத் தொடர்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வெட்டுக் குத்தில் முடிந்துள்ளது.
ஆயேர் கூனிங் செலாத்தானில் (Ayer Kuning Selatan) உள்ள வீட்டில் அதிகாலை 3.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
பாராங் கத்தியால் சரமாரியாக வெட்டப்பட்டதில் 45 வயது ஆடவர் படுகாயமடைந்தார்.
அவரின் தோள்பட்டை, வயிறு, முதுகு, கால்களில் இரத்தம் கொட்டியது.
பொது மக்கள் கொடுத்த தகவல் பேரில் போலீஸ் சம்பவ இடம் விரைந்தது.
இரத்த வெள்ளத்தில் கிடந்தவர் சிகிச்சைக்காக தம்பின் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
இதையடுத்து 31 வயது உள்ளூர் ஆடவர் கைதானதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் அமிருடின் சாரிமான் (Amiruddien Sariman) கூறினார்.
சந்தேக நபரைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்ற ஆணையும் பெறப்பட்டுள்ளது.