Latestமலேசியா

நாடு முழுவதும் ம.இ.கா குடும்பதின விழா; சுங்கை சிப்புட் மக்களுக்கு விரைவில் விடிவுக்காலம் பிறக்கும் – விக்னேஸ்வரன் உறுதி

சுங்கை சிப்புட், ஜூன்-1 – ம.இ.கா உறுப்பினர்களை மட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்தியச் சமுதாயத்தையும் ஒன்றுபடுத்துவதே ம.இ.கா குடும்ப தின விழாவின் முக்கிய நோக்கம் என கட்சியின் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

​ம.இ.காவின் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நாடு முழுவதும் நேற்று ம.இகா குடும்ப தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

அவ்வகையில் ம.இ.காவின் பாரம்பரியத் தொகுதியான பேராக், சுங்கை சிப்புட்டில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன், பதவி அல்லது பட்டங்கள் இல்லாவிட்டாலும் ம.இ.கா தொடர்ந்து இந்தியச் சமூகத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

எத்தனை ஏச்சுபேச்சுக்கள் இருந்தாலும், சமுதாயத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடும் ஒரே கட்சி ம.இ.கா தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

​கடந்த தேர்தலில் தாம் சுங்கை சிப்புட் தொகுதியில் தோல்வி கண்டபோதிலும், வெற்றியோ தோல்வியோ தொகுதி மக்களுக்குத் தொடர்ந்து சேவையாற்றுவதே தமது இலக்கு என்று அவர் தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், சுங்கை சிப்புட் மக்களுக்கு விரைவில் ஒரு நல்ல விடிவுக்காலம் பிறக்க வேண்டும் என்பதே தமது பிரார்த்தனை என விக்னேஸ்வரன் உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்த 80-ஆம் ஆண்டில் பழையபடி ம.இ.கா தொடங்கிய இடமான தோட்டங்களுக்கே மீண்டும் செல்வது காலத்தின் அவசியம் என்றும், இதுபோன்ற குடும்ப தின விழாக்களும் மற்ற சமூக நிகழ்வுகளும் மாதந்தோறுமோ அல்லது வாரந்தோறுமே நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

விழாவை சிறப்பாக ஏற்பாடுச் செய்த பேராக் ம.இகாவுக்கும் விக்னேஸ்வரன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!