
கோலாலாம்பூர், ஏப்ரல்-4-திரெங்கானுவில் கடந்தாண்டு ஜூன் மாதம் நிகழ்ந்த துயரமான படகு விபத்தில், 3 பேர் உயிரிழந்து, மேலும் 9 பேர் காயமடைந்ததை தொடர்ந்து, அவர்களுக்கான நீதி குறித்த கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது.
அவ்விபத்தில், 3 மற்றும் 10 வயதுடைய 2 குழந்தைகள் மற்றும் 40 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனால், ஒரு பெண் தனது கணவரையும் குழந்தையையும் ஒரே நேரத்தில் இழந்ததால், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள பினாங்கு ம.இ.கா தலைவர் டத்தோ J. தினகரன், மனித உயிரை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்று வலியுறுத்தினார்.
அச்சம்பவத்தில் தொடர்புடைய படகு ஓட்டுநர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததோடு, செல்லுபடியாகும் உரிமம் இல்லாதவராக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சம்பவம் நடந்து 9 மாதங்கள் கடந்தும், இதுவரை அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது கவலையளிப்பதாக தினகரன் சொன்னார்.
எனவே, அதிகாரிகள் உடனடியாக விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
குற்றமிழைத்தவரின் இனம், பின்னணி அல்லது நிலைமையைப் பொருட்படுத்தாமல் நீதி நிலைநிறுத்தப்பட வேண்டும்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அவசியம் என தினகரன் தனறிக்கையில் வலியுறுத்தினார்.
உள்ளூரைச் சேர்ந்த 20 வயதிலான சம்பந்தப்பட்ட அந்த படகோட்டுநர், போதைப்பொருள் தொடர்பில் ஏற்கனவே 5 குற்றப்பதிவுகளைக் கொண்டவர் என, திரங்கானு போலீஸ் அப்போது ஊறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



