
ஜகார்த்தா, அக்டோபர்-28,இந்தோனேசிய உம்ரா யாத்ரீகர்கள் மலேசியா மற்றும் சிங்கப்பூர் வழியாகச் செல்வதைத் தவிர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த உள்ளூர் விமானச் சேவைகள் மூலம் நேரடியாகச் சவூதி அரேபியாவுக்குப் பயணிக்க வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
ஆண்டுதோறும் சுமார் 70,000 இந்தோனேசிய யாத்ரீகர்கள் வெளிநாட்டு விமானங்களைப் பயன்படுத்தி, மலேசியா மற்றும் சிங்கப்பூர் வழியாக _transit_ எனப்படும் இடைநிறுத்தப் பயணம் மேற்கொள்வதாக, அந்நாட்டின் ஹஜ் மற்றும் உம்ரா துணை அமைச்சர் Dahnil Anzar Simanjuntak தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகையைப் பொருத்தவரையில் உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேசியாவில்,
ஆண்டுக்கு 2 மில்லியன் பேர் உம்ரா பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்த 70,000 பேரையும் ‘Garuda Indonesia’ மற்றும் ‘Lion Air Group” போன்ற உள்நாட்டு விமானங்கள் மூலம் அனுப்புவதன் வழி நாட்டின் பொருளாதாரத்தைத் தக்கவைக்க முடியும் என அரசு நம்புகிறது.
இருப்பினும், யாத்ரீகர்களை ஈர்க்கும் வகையில் உள்நாட்டு நிறுவனங்கள் தங்களின் சேவைத் தரத்தை உயர்த்தவதோடு, குறைந்த கட்டணச் சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதிபர் பிராபோவோ சுபியாந்தோ தலைமையிலான அரசாங்கதின் உள்நாட்டு பொருளாதார பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.



