
சிங்கப்பூர், அக்டோபர்-28,சிங்கப்பூருக்குள் 800-க்கும் மேற்பட்ட சிகரெட் பெட்டிகளைக் கடத்த முயன்றதாக 33 வயது மலேசிய லாரி ஓட்டுநர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 8-ஆம் தேதி, வூட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகச் சிங்கப்பூர் குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.
காய்கறிகளை ஏற்றிச் சென்ற மலேசியப் பதிவு எண் கொண்ட லாரியை _scan_ செய்தபோது சந்தேகத்திற்குரிய பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், காய்கறிக் கூடைகளுக்கு அடியில் வெள்ளை நிற பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, வரி செலுத்தப்படாத 800-க்கும் மேற்பட்ட சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைதான ஓட்டுநர், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களோடு மேல் விசாரணைக்காகச் சிங்கப்பூர் சுங்க இலாகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.



