கோலாலம்பூர், ஏப் 17 – நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர் டான்ஸ்ரீ லீ லாம் தை கேட்டுக்கொண்டுள்ளார். விமான நிலையங்களில் மட்டுமின்றி பொதுவாகவே துப்பாக்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். KLIA 1 அனைத்துலக விமான நிலையத்தில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிகளை பயன்படுத்தும் விவகாரத்தில் கடுமையான கட்டுப்பாடு விதிமுறைகள் தேவையென பாதுகாப்பான சமூகத்திற்கான கூட்டணியின் தலைவருமான லீ லாம் தை கேட்டுக் கொண்டார்.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் விமான நிலையங்களில் பரிசீலிக்கப்படுகையில், மற்றொரு முக்கியமான அம்சத்தை நாம் மறந்துவிடக் கூடாது. அதுதான துப்பாக்கி கட்டுப்பாடு என்று அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு சிக்கலுக்கும் இது காரணமாக இருப்பதாக அவர் கூறினார். கடுமையான சட்டங்கள் மற்றும் அமலாக்கத்தால் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியாவில் துப்பாக்கி கடத்தல் குறைவாக இருந்தாலும், சிறிய எண்ணிக்கையிலான சம்பவங்கள்கூட உயிரிழப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என இன்று வெளியிட்ட அறிக்கையில் லீ லாம் தை தெரிவித்தார். கூடுதலான கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிகமான பணியாளர்களை நியமிப்பதன் மூலம் நாட்டின் நுழைவு மையங்களில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும் உளவுத்துறையைப் பகிர்ந்துகொள்வதற்கும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் நமது அண்டை நாடுகளுடன் நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.