
சென்னை, ஜூன்-25-“நான் பேசினாலும் பிரச்னை, பேசாவிட்டாலும் பிரச்னை’_ என நடிகர் ரஜினிகாந்த் பொது மேடைகளில் தான் சந்திக்கும் விமர்சனங்கள் குறித்து கலகலப்பாகவும், அதிரடியாகவும் பேசியுள்ளார்.
அவரது 173-வது திரைப்படமான ‘தர்மன்’ படத்தின் தலைப்பு மற்றும் _first look_ போஸ்டர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய சூப்பர்ஸ்டார், _’இப்போது எனக்கு மேடைகளில் பேசவே தயக்கமாக இருக்கிறது. நான் பேசினால் எனக்கு மட்டுமில்லாமல், என்னைச் சார்ந்தவர்களுக்கும் அது பிரச்னையாகி விடுகிறது. சரி, பேசாமல் அமைதியாக இருந்தால்… வாயில் என்ன கொழுக்கட்டையா வைத்திருக்கிறார்?”_ என்று கிண்டல் செய்கிறார்கள். நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது என்பதை நான் தாமதமாகவே புரிந்து கொண்டேன்’ என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இதைக் கேட்டதும் மேடையிலிருந்தவர்களும் பத்திரிகையாளர்களும் கைத்தட்டி சிரித்தனர்.
ரஜினிகாந்த அரசியலில் இல்லாவிட்டாலும், அரசியல் நிகழ்வுகள் குறித்தும் நாட்டு நடப்புகள் குறித்தும் அவர் கருத்துரைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, இரசிகர்களில் ஒரு சாரார் மற்றும் ஊடகங்கள் மத்தியில் நீண்டகாலமாகவே நிலவுவது குறிப்பிடத்தக்கது.
அது பெரும்பாலும் சர்ச்சையில் முடிவதால் ரஜினிக்குள் இருக்கும் ஆதங்கத்தை இந்தப் பேச்சில் காணமுடிந்தது.
உலகநாயகன்கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் இந்த ‘தர்மன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.
இந்த விழாவில் கமல்ஹாசன், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து, நடிகை சிம்ரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
‘பேட்ட’ படத்திற்குப் பிறகு ரஜினிகாந்துக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும்.



