Latestமலேசியா

நியாயமான இழப்பீடு, இல்லையேல் நிலத்தில் கை வைக்காதீர்: கின்றாரா பள்ளி நிர்வாகம் திட்டவட்டம்

கின்றாரா, மார்ச் 25 – மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து நியாயமான இழப்பீடு கிடைக்காத பட்சத்தில், பள்ளியின் ஒரு பகுதி நிலத்தை விட்டுத் தர முடியாது என பூச்சோங், கின்றாரா தோட்டத் தமிழ்ப்பள்ளி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

Jalan Kinrara Mas சாலையின் விரிவாக்கப் பணிகளுக்காக அப்பள்ளி வளாகத்தில் இருந்து 3,000 சதுர அடி நிலத்தை அந்த மேம்பாட்டு நிறுவனம் கேட்பதாக தெரிய வருகிறது.

அப்படிச் செய்வதென்றால் பாலர் பள்ளி, சிற்றுண்டிச்சாலை உள்ளிட்ட பள்ளியின் சில கட்டங்களை இடிக்க வேண்டியிருக்கும் என்பதே பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களின் கவலையாக உள்ளது.

சுமார் 700 மாணவர்கள் பயிலும் அப்பள்ளிக்கு, ஒரு மூன்று மாடி புதியக் கட்டடத்தையும், 2 மாடிகளைக் கொண்ட சிற்றுண்டிச்சாலையையும் கட்டித் தருமாறு பள்ளி நிர்வாகம் வைத்த கோரிக்கையையும் மேம்பாட்டு நிறுவனம் நிராகரித்திருக்கிறது.

எனவே, நியாயமான இழப்பீட்டு திட்டத்துடன் வராத வரை, மேம்பாட்டு நிறுவனத்தின் எந்த கோரிக்கைக்கும் தாங்கள் இணங்கப் போவதில்லை என, பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் கோபி குருசாமி, ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற Town Hall விளக்கக் கூட்டத்தில் திட்டவட்டமாகக் கூறினார்.

அச்சாலையை விரிவுப்படுத்துவதென, மேம்பாட்டு நிறுவனம், கோலாலம்பூர் மாநகர மன்றம், செப்பூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் திரேசா கோக்கின் பிரதிநிதி, கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் சு ஹான் ஆகியோர் கடந்த டிசம்பர் 7-ம் தேதி பங்கேற்ற ஒரு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

ஆனால், அதில் பங்கேற்ற தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கோபி சொன்னார்.

ஏப்ரல் 1-ம் தேதி நிலத்தை ஒப்படைப்பது தொடர்பில் மார்ச் 18-ஆம் தேதி ஒரு சந்திப்பு இருப்பதாக மார்ச் 4-ம் தேதி கடிதம் கிடைத்த வரைக்கும் அப்படியொரு மேம்பாட்டு திட்டம் இருப்பதாக தங்களுக்குத் தெரியாது என்றார் அவர்.

நாங்கள் கேட்கும் இழப்பீட்டைப் பரிசீலிக்காத வரை நிலத்தைத் தொடாதீர்கள் எனக் கூறி அக்கடிதத்திற்கு பதிலும் அனுப்பப்பட்டு விட்டது.

இருந்தாலும், அனைவருக்கும் தோதுவான ஒரு முடிவை எட்ட, மேம்பாட்டு நிறுவனத்துடனும் சம்பந்தப்பட்ட அதிகாரத் தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த பள்ளி நிர்வாகம் இன்னமும் தயாராகவே இருப்பதாக கோபி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!