
சிரம்பான், ஜூன்-8-வரக்கூடிய 16-ஆவது நெகிரி செம்பிலான் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி தனித்து 20க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றி பலமான ஆட்சியை அமைப்பதே தங்களின் முதன்மை இலக்கு, என அதன் மாநிலத் தலைவர் அந்தோணி லோக் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சிரம்பானில் நடைபெற்ற சிறப்பு DAP மாநிலக் குழுக் கூட்டத்திற்குப் தலைமை தாங்கிய பின் பேசிய அவர், கடந்த 2018-ஆம் ஆண்டு தேர்தலில் PH கூட்டணி தனித்து 20 இடங்களை வென்ற சாதனையை மக்கள் மீண்டும் வழங்குவார்கள் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
மேலும், தாம் பிரதிநிதித்து வரும் ‘சென்னா’ சட்டமன்றத் தொகுதியை மீண்டும் தற்காத்துப் போட்டியிடவிருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
மாநிலத்தில் DAP வசமுள்ள 11 தொகுதிகளையும் தக்கவைத்துக் கொள்ளப் போவதாகவும், கூட்டணிக் கட்சிகளான பி.கே.ஆர் மற்றும் அமானாவுக்கு DAP முழு பிரச்சார ஆதரவை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹருணுக்கு அம்னோவின் 14 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவை மீட்டுக் கொண்டதால், அக்டோபர் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஏற்படவிருந்த அரசியல் முடக்கத்தைத் தவிர்க்கவே இந்த முன்கூட்டியத் தேர்தல் நடத்தப்படுவதாக அவர் விவரித்தார்.
60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால், பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் இயந்திரத்தை முடுக்கிவிடப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விரைவில் நெகிரி செம்பிலான் வரவுள்ளார்.
இத்தேர்தல் வரும் ஜூலை மாதத்தில் ஜோகூர் மாநிலத் தேர்தலுடன் இணைந்து ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.



