
தம்பின், ஜூன்-8-நெகிரி செம்பிலான், தம்பினில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலயத்தின் மூன்றாவது மகா கும்பாபிஷேகப் பெருவிழா, நேற்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களின் பக்தி கோஷங்களுடன் மிக விமரிசையாக நடைபெற்றது.
முன்னோர்களால் அரசமரத்தின் கீழ் எளிய முறையில் தொடங்கப்பட்டு, இன்று பிரம்மாண்ட ஆலயமாக உருவெடுத்துள்ள இத்திருத்தலத்தின் கும்பாபிஷேகப் பணிகள் காலை ஆறு மணி அளவில் பக்திப் பரவசத்துடன் தொடங்கின.
பின்னர் சுந்தர விமான ஸ்தூபி மற்றும் பரிவார விமானங்களுக்கும், தொடர்ந்து மூலமூர்த்தி ஸ்ரீ மகா சுந்தர விநாயகருக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான வீரப்பன் சுப்ரமணியம், இப்பகுதி மக்களுக்குச் செய்து வரும் சேவைகள், சாலை மேம்பாடுகள் மற்றும் புதிய நவீன தகன மைய வசதிகள் குறித்த எதிர்காலத் திட்டங்களை விவரித்துப் பேசினார்.
ஆலயத்திற்கு மானியம் வழங்கி உதவிய மாநில – மத்திய அரசுகளுக்கு நன்றித் தெரிவித்ததோடு, வரக் கூடிய காலத்தில், ஒரு பிரமாண்ட மண்டபம் கட்டும் திட்டம் குறித்தும் வீரப்பன் பேசினார்.
கூடுதலாக, மின்சுடலை கட்டுமானமும் விரைவில் தொடங்கி ஆண்டிறுதிக்குள் முடிய இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
ஆலயத் தலைவர் கோவிந்தசாமி ராஜூ, பக்தர்களின் பேராதரவோடு இந்த மூன்றாவது மகா கும்பாபிஷேகம் வரலாற்றுச் சிறப்போடு நடந்து முடிந்துள்ளது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்தார்.
கும்பாபிஷேக துணைத் தலைவர் சுப்ரமணியம் அழகிரி, பல்வேறு சீரமைப்புகள் நிறைவடைந்து, வழிபாட்டுக்கு மட்டுமின்றி சமூகப் பணிகளுக்கும் இந்த சுந்தர விநாயகர் ஆலம் முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறினார்.
கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற பக்தர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்தை வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்து கொண்டனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று முதல் அடுத்த 48 நாட்களுக்கு ஆலயத்தில் விசேஷ மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெறவுள்ளதால், பக்தர்கள் அனைவரும் திரளாக வந்து இறையருள் பெறுமாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.



