Latestமலேசியா

‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்ட முறைகேடு புகார்கள் குறித்த MACC விசாரணைக்கு மனிதவள அமைச்சு முழு ஆதரவு – ரமணன்

கோலாலம்பூர், ஜூன் 8 -‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயின் தற்போதைய விசாரணைகளுக்கு மனிதவள அமைச்சு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அனைத்து அரசாங்க உதவித் திட்டங்களும் மிக உயர்ந்த நேர்மை, பொறுப்புக்கூறல் மற்றும் சிறந்த நிர்வாகத் தரத்துடன் நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதில் அமைச்சு உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெர்கெசோவின் ஹ்சொந்த உள்நாட்டு கண்காணிப்பு மற்றும் மோசடி தடுப்பு வழிமுறைகள் மூலமே இந்த சந்தேகத்திற்குரிய முறைகேடுகள் முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

பெர்கெசோவின் மோசடி தடுப்பு, அறநெறி மற்றும் நேர்மை பிரிவு (ஏ.எஃப்.இ.ஐ), 2024 ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்ட உள்நாட்டு தரவு பகுப்பாய்வின் போது சந்தேகத்திற்கிடமான முறைகள் மற்றும் சாத்தியமான முறைகேடுகளை அடையாளம் கண்டதாக அவர் தெரிவித்தார்.

ஆரம்பக்கட்ட கண்டறிதலுக்குப் பிறகு, ‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் கீழ் கோரிக்கைகளில் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்குரிய முறைகேட்டின் அளவை உறுதிப்படுத்த ஏ.எஃப்.இ.ஐ பிரிவு புலனாய்வு சேகரிப்பு, கண்காணிப்பு மற்றும் விரிவான விசாரணைகளைத் தொடங்கியதாக அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டு முழுவதும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று, ஆதாரங்கள் திரட்டப்பட்டு, பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, சந்தேகத்திற்குரிய முறைகேட்டின் செயல்முறை கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

பெர்கெசோ முறையான வழியில் இந்த வழக்கை 2025 ஆகஸ்டில் பேராக் எம்.ஏ.சி.சி-யிடம் ஒப்படைத்தது, பின்னர் இந்த வழக்கின் தாக்கம் விரிவடைந்ததால் விசாரணை எம்.ஏ.சி.சி தலைமையகத்திற்கு மாற்றப்பட்டது.

விசாரணை முழுவதும்ஹ் பெர்கெசோ, எம்.ஏ.சி.சி-யுடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளதாகவும், அதிகாரிகளுக்குத் தேவையான அனைத்து ஆவணங்கள், பதிவுகள் மற்றும் தகவல்களை வழங்கி முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த வழக்கு பெர்கெசோவின் நிர்வாகம், இணக்கம் மற்றும் மோசடி தடுப்பு வழிமுறைகள் திறம்பட செயல்படுவதை நிரூபிப்பதாக அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் கைதிகள், முதியவர்கள் மற்றும் வேலை தேடும் பிற மலேசியர்களின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதற்காகவும், வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும் ‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அவர் வலியுறுத்தினார்.

மலேசியர்களுக்கு உதவ நோக்கம் கொண்ட அரசாங்க ஊக்கத்தொகைகளை தவறாகப் பயன்படுத்துவது பொது நம்பிக்கையைச் சிதைப்பதாகவும், தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆதரவைப் பறிப்பதாகவும் அவர் கூறினார்.

பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவோ அல்லது மோசடியான கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததாகவோ கண்டறியப்படும் எந்தவொரு நபர் அல்லது நிறுவனம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதை அமைச்சு முழுமையாக ஆதரிப்பதாக டத்தோஶ்ரீ ரமணன் தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு தொடர்பான ஊக்கத்தொகை திட்டங்களில் கசிவுகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க நிர்வாகக் கட்டமைப்புகள், சரிபார்ப்பு செயல்முறைகள் மற்றும் கண்காணிப்பு வழிமுறைகளை பெர்கெசோ மூலம் தொடர்ந்து வலுப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!