
பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 30 -நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, அங்கு தேடல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவ மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான SMART அனுப்பப்படவுள்ளது.
இதனை அறிவித்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பாதிக்கப்பட்ட மலேசியர்களைக் கண்டறிந்து பாதுகாப்பாக தாயகம் அழைத்து வருவதுடன், காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கும் SMART குழு உதவும் என்றார்.
SMART குழுவை விரைவில் அனுப்ப நேபாள அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பாதுகாப்பு மன்றம், NADMA மற்றும் வெளியுறவு அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதேவேளை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பேரிடருக்குப் பிந்தைய மீட்புப் பணிகளுக்கும் உதவ, நேபாளத்திற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர் நிதியுதவியையும் மலேசியா வழங்கவுள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 55 மலேசியர்களை இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்நிலையில், பேரழிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 734-ஆக உயர்ந்துள்ளதுடன், 2,498 பேர் காணாமல் போயுள்ளனர்.



