Latestமலேசியா

BUDI95 மீண்டும் 300 லிட்டர்; பள்ளிகளுக்கு RM1.5 பில்லியன் – தேசிய தினத்தில் அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா, ஆகஸ்ட் 30 -BUDI95 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய விலையிலான RON95 பெட்ரோலுக்கான மாதாந்திர ஒதுக்கீடு, தற்போதைய 200 லிட்டரிலிருந்து மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படுகிறது.

செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கையால் 1 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

69-வது தேசிய தினத்தை முன்னிட்டு புத்ராஜெயாவில் உரையாற்றிய அவர், BUDI Diesel திட்டத்தின் கீழ் டீசல் மாதாந்திர ஒதுக்கீடும் 300 லிட்டரிலிருந்து 400 லிட்டராக உயர்த்தப்படும் என்றார்.

இதனிடையே, அனைத்து வகை பள்ளிகளின் பராமரிப்புக்கான அடுத்தாண்டு ஒதுக்கீடு 50 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, RM1 பில்லியனிலிருந்து RM1.5 பில்லியனாக உயர்த்தப்படுகிறது. இதில் தேசிய, சீன, தமிழ், சமய மற்றும் சிறப்புக் கல்விப் பள்ளிகளும் அடங்கும்.

மேலும், 18 முதல் 30 வயதுடைய இளைஞர்களுக்கு AI for the People திட்டம் விரிவுபடுத்தப்படுவதுடன், பயிற்சியை நிறைவு செய்யும் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு முன்னணி AI செயலிகளுக்கான மூன்று மாத இலவச சந்தா வழங்கப்படும்.

பொது சுகாதாரத் துறையின் டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்த RM1 பில்லியன், சிறு வணிகங்களுக்கான மைக்ரோ நிதியுதவியை அதிகரிக்க மேலும் RM1 பில்லியன் ஒதுக்கப்படுகிறது.

அத்துடன், சிறு வியாபாரிகள் மற்றும் வீட்டிலிருந்து தொழில் நடத்தும் தாய்மார்களுக்கு உதவ RM200 மில்லியன் மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், e-Invoice விலக்குக்கான ஆண்டு விற்பனை வரம்பு RM1 மில்லியனிலிருந்து RM3 மில்லியனாக உயர்த்தப்படுகிறது.இந்த முக்கிய நடவடிக்கைகள் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!