Latestமலேசியா

பந்திங் சுங்கை புவாயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் மலேசியாவின் முதல் ஆதியோகி சிலை திறப்பு

மலேசியாவில் முதல் முறையாக பந்திங் சுங்கை புவாயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலை திறப்பு விழா, மகா மாரியம்மன் ஆலயம், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் ஒரு சேர வெகு விமரிசையாக நடத்தப்பட்டது. இவ்விழாவில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1918 ஆண்டு கட்டப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த இவ்வாலயம் முன்பு சுங்கை புவாயா தோட்டத்தில் இருந்ததாகவும் தோட்ட மேம்பாட்டு காரணமாக இங்கு சுங்கை புவாயா தமிழ்ப்பள்ளி அருகில் தோட்ட நிறுவனத்தால் நிலம் ஒதுக்கப்பட்டதை அடுத்து 2012 ஆம் ஆண்டு புதிய ஆலய கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் அதோடு ஆலயத்தின் அருகில் புதிய பல்நோக்கு மண்டபம் கட்டப்பட்டதாக ஆலயத்தின் தலைவர் ரா.பரமசிவம் தெரிவித்தார்.

தற்போது 12 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது கும்பாபிஷேகத்தை ஒட்டி இம்முறை ஆலயத்தில் ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத விஸ்வநாத சுவாமி கோயில் கட்டப்பட்டுள்ளதோடு ஆதியோகி சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் வழி மலேசியாவில் முதல் ஆதியோகி சிலை அமைந்துள்ள ஆலயம் என்ற பெருமையை பந்திங் சுங்கை புவாயா ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

பகாவ் (Bahau) ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தின் தலைமை குருக்கள் சிவஸ்ரீ இரமணி பட்டு குருக்கள் தலைமையில் தமிழ்நாட்டிலிருந்து வருகை புரிந்த வேத விற்பன்னர்கள் மகா கும்பாபிஷேக திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழாவை நடத்தி வைத்தனர்.

கும்பாபிஷேகம் விழாவிற்கு ம.இ.கா. வின் தேசிய துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ M.சரவணன் சிறப்பு வருகை புரிந்தார்.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 13-7-2026 தொடங்கி அடுத்து வரும் 48 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடத்தப்படும் என்றும் இதில் பொது மக்களும், பக்தர்களும் கலந்து கொள்ளலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

நாட்டில் முதல் ஆதியோகி சிலை அமையப்பெற்ற இந்த ஆலய கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளவும் ஆதியோகி சிலையை காணவும் நாடு முழுவதிலுமிருந்து பேருந்துகளில் பயணம் செய்து ஆலயத்தில் குவிந்ததோடு உள்ளூர் மக்களும் சேர்ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த கும்பாபிஷேக பெருவிழாவில் கூடினர்.

கோலலங்காட் வட்டாரத்தில் ஒரு கும்பாபிஷேக விழாவில் இவ்வளவு மக்கள் கூடியது இதுவே முதல் முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த மகா கும்பாபிஷேக பெருவிழா வெற்றிகரமாக நடைபெற பெருமனதுடன் உதவி புரிந்த அரசு / அரசு சாரா இயக்கங்களுக்கும், உபயத்தாரர்களுக்கும், நன்கொலையாளர்களுக்கும், உள்ளன்போடு ஒத்துழைப்பயும், ஆதரவையும் வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!