
கோலாலம்பூர், ஜூன்-8-அரசாங்க கூட்டணியில் எந்த இனத்தையோ அரசியல் கட்சியையோ சேர விடாமல் அவர்களின் உரிமையை மறுப்பது தவறு என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
மலேசியா, அரசியலமைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட நாடு என்பதால், ஜனநாயக முறையில் மக்கள் அளித்த தீர்ப்பையும் அனைத்து இனங்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கமும் அமைச்சுகளும் நாட்டின் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தேர்தல் பிரச்சாரங்களின்போது வெளியாகும் இனவாத அல்லது பாகுபாடான கருத்துகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும், எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைவரையும் மனிதநேயத்துடன் நடத்த வேண்டும் என்றும் அன்வார் தெரிவித்தார்.



