
சுங்கை பட்டாணி – ஜூலை-20 – கெடா, சுங்கை பட்டாணியில் இடைநிலைப் பள்ளியொன்றின் கழிவறையில் முதலாம் படிவ மாணவி கட்டிப்போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு வகுப்புகள் முடிந்த பிறகு வழக்கம் போல் பள்ளி வாசலில் சிறுமி வராதபோது, ஏதோ தவறு இருப்பதாக சிறுமியின் தாய் உணர்ந்தார்.
பள்ளி முழுவதும் தேடிய பிறகு, தாயும் ஒரு பாதுகாவலரும் அவளை கழிப்பறையில் கண்டனர். 13 வயது அச்சிறுமியின் வாய் கைக்குட்டையால் கட்டப்பட்டு, கைகள் மற்றும் கால்கள் கழுத்தில் டைகளால் கட்டப்பட்டிருந்ததை கண்டு தாய் அதிர்ந்துபோனார்.
உடனடியாக மகளை மீட்டு, கைகள் மற்றும் கால்களில் ஏற்பட்ட இலேசான காயங்களுக்கு சிகிச்சைக்காக தாய் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் போலீசிஸில் புகார் அளிக்கப்பட்டது. மாணவியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சக மாணவியர் 2 பேர் கைதாகினர்.
பொறாமைக் காரணமாக கட்டி வைத்து கொடுமைப்படுத்தியதை அவ்விரு சந்தேக நபர்களும் ஒப்புக்கொண்டதாக குவாலா மூடா போலீஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் (Hanyan Ramlan) தெரிவித்தார்.
மேற்கொண்டு விசாரணை நடப்பதாக அவர் சொன்னார்.