
கிள்ளான், ஜூலை-17- கிள்ளானில், பள்ளியில் விஷம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் 17 வயது மாணவி ஷர்வீனாவின் மரணத்திற்கு 2 மாதங்களாகியும் நீதி கிடைக்கவில்லை என அவரின் குடும்பத்தார் முறையிட்டுள்ளனர்,
பள்ளி நிர்வாகமோ, மாநில கல்வி இலாகாவோ அல்லது கல்வி அமைச்சோ இதுவரை வாய் திறக்கவில்லை; எனவே, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் இதில் நேரடியாக தலையிட்டு பதில் தர
வேண்டுமென, மாணவியின் பெற்றோர் சார்பில் வழக்கறிஞர் அருண் துரைசாமி வலியுறுத்தினார்.
இன்று புத்ராஜெயாவில் உள்ள கல்வி அமைச்சு கட்டடத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அவ்வாறு சொன்னார்.
மே 27-ஆம் தேதியன்று நடந்த சம்பவத்தில், பள்ளி ஊழியர்கள் அவசர உதவி வழங்காமல் அம்புலன்ஸ் வண்டி வரட்டும் என 2 மணி நேரங்களுக்கும் மேலாக காத்திருந்தனர்.
அருகிலுள்ள கிளினிக்கிற்கு மாணவியை அழைத்து செல்லக்கூடிய நிலையில், SOP நடைமுறைகளைச் சுட்டிக் காட்டி பள்ளி அவ்வாறு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டதையும் அருண் சுட்டிக் காட்டினார்.
அதே சமயம், ஷர்வீனா குடித்தாகக் கூறப்படும் விஷம், பள்ளிக்கு வந்தது எப்படி? அந்த அளவுக்கா பள்ளியில் பாதுகாப்பு மெத்தனமாக உள்ளது என அருண் கேள்வி எழுப்பினார்.
இவ்வேளையில், பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர் தங்களின் வேதனையை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்துகொண்டனர்.
மகளுக்கு விஷம் குடிக்க அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் 3 ஆண் மாணவர்களுக்கு எதிராக அவர்கள் புகார் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அலட்சியமாக இருந்ததாகக் கூறி பள்ளியின் 6 ஊழியர்களுக்கு எதிராகவும் ஒரு புகார் செய்யப்பட்டுள்ளது.
மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கேள்வி எழுப்பிய 2 மாதங்களுக்குப் பிறகும், சம்பந்தப்பட்ட தரப்புகள் கண்டும் காணாமல் இருப்பது குடும்பத்தாரை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் இதற்கு பதில் கூறியே ஆக வேண்டுமென அருண் வலியுறுத்தினார்.