புத்ராஜெயா, செப்டம்பர் -14, 2024 MAHA விவசாயக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள வண்ண வண்ணக் கோழிக் குஞ்சுகள், நல்ல நிலையிலேயே இருக்கின்றன.
வலி ஏற்பட்டதாகவோ சித்ரவதையை அனுபவிப்பதாகவோ அவை எந்தவோர் அறிகுறியையும் காட்டவில்லை என, கால்நடை சேவைத் துறை (DVS) உறுதிப்படுத்தியுள்ளது.
கோழிக் குஞ்சுகளுக்கு வர்ணம் பூசுவது 2015 விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகாது.
பயன்படுத்தப்படும் வர்ணமும், வர்ணம் பூசப்படும் விதமும், கோழிக் குஞ்சுகளுக்கு ஆபத்தாக இல்லாத வரை, அவற்றுக்கு வலியை ஏற்படுத்தாத வரை, பிரச்னையில்லை என DVS தெளிவுப்படுத்தியது.
அவ்வகையில், MAHA கண்காட்சியில் கோழிக் குஞ்சுகளுக்கு வர்ணம் பூசப்பட்டதில், கண்காட்சி நடத்துநர்கள் உரிய விதிமுறைகளைப் பின்பற்றி அவற்றின் நலத்துக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டனர்.
எனவே, அது போன்ற விவகாரங்கள் குறித்து கருத்துரைக்கும் முன்னர், கால்நடை சேவைத் துறையிடம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
அதை விடுத்து தன்னிச்சையாக கருத்து வெளியிட்டு பொது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் சினத்தையும் உண்டு பண்ணக் கூடாதென, DVS அறிக்கையொன்றில் கூறியது.
‘2024 MAHA கண்காட்சியில் வெளிப்படையாக நடக்கும் மிருகவதை’ என்ற தலைப்பில், பதிவுப் பெற்ற கால்நடை மருத்துவர் தனது டிக் டோக்கில் வீடியோ பதிவேற்றி, அது வைரலானது குறிப்பிடத்தக்கது.
செப்பாங் MAEPS கண்காட்சி தளத்தில் செப்டம்பர் 11 முதல் 22 வரை நடைபெறும் MAHA விவசாயக் கண்காட்சியில், விலங்குகளின் நலன்களைக் கண்காணிக்க ஏதுவாக, விலங்கு நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் DVS தெரிவித்தது.