
கோலாலம்பூர், அக்டோபர்-4 – மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான ‘இளஞ்சிவப்பு ரிப்பன்’ (Pink Ribbon) பிரச்சாரங்களுக்குக் கிடைக்கும் அதே அளவிலான கவனமும், பொது மக்களின் ஆதரவும் சிறார் புற்றுநோய் விழிப்புணர்வுக்கும் கிடைக்க வேண்டும் என, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலேசியச் சிறார்களுக்கான சங்கமான CCAM வலியுறுத்தியுள்ளது.
செப்டம்பர் மாத சிறார் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டுப் பேசிய அச்சங்கத்தின் தலைவர் லாவண்யா கணபதி, ஒரு குழந்தை எந்த நாட்டில் பிறக்கிறது என்பது அதன் உயிர் பிழைக்கும் வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடாது என சுட்டிக்காட்டினார்.
உயர் வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறார்களில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் குணமடையும் நிலையில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் இவ்விகிதம் 30 விழுக்காட்டுக்கும் குறைவாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் – WHO தெரிவித்துள்ளதையும் அவர் மேற்கோள் காட்டினார்.
இதனிடையே, டெய்லர்ஸ் பல்கலைக்கழக AIESEC அமைப்பின் ‘Here For You’ திட்டம் மூலம், பங்கேற்பாளர்கள் Little Warriors’ Collection முயற்சிக்கு பங்களித்ததுடன், மலேசியாவில் சிறார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் அறிந்துகொண்டனர்.
Monteez குழந்தை பராமரிப்பு மையத்திலும், சிறார்கள் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் பங்கேற்று, CCAM-மின் பணிகளுக்கு ஆதரவு வழங்கினர்.
மேலும், Caring and Loving Association தலைவர் ஜீவன், புற்றுநோயிலிருந்து மீண்ட CCAM பயனரான ஒரு சிறாரின் தேவையை நிறைவேற்றும் வகையில் சைக்கிள் ஒன்றை நன்கொடையாக வழங்கினார்.
இவ்வாறு, கற்றல், நிதி திரட்டல், நன்கொடைகள் மற்றும் நேரடியான உதவிகள் மூலம் விழிப்புணர்வை செயல்பாடாக மாற்ற முடியும் என லாவண்யா தெரிவித்தார்.
அரசு சாரா அமைப்புகள், பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஆண்டு முழுவதும் இந்த விழிப்புணர்வு முயற்சியில் இணைய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
சிகிச்சைச் செலவுகளுக்கான உதவி உட்பட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் CCAM தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகிறது.
“நிதிப் பற்றாக்குறை காரணமாக எந்தவொரு குழந்தைக்கும் சிகிச்சை மறுக்கப்படக் கூடாது” என்பதே தங்களது முக்கியக் கொள்கை என லாவண்யா மீண்டும் கூறினார்.



