பட்டர்வொர்த், ஜூன் 14 – பினாங்கில், தனது நான்கு வயது சொந்த மகளிடம் பாலியல் சேட்டைகளை புரிந்ததோடு, இயற்கைக்கு புறம்பாக அவருடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட காமுகன் ஒருவனுக்கு எதிராக, பட்டர்வொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
எனினும், 38 வயதான, அரசாங்க ஊழியரான அவ்வாடவன், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினான்.
அவ்வாடவன் தனது நான்கு வயது மகளிடம், பாலியல் சேட்டைகளை புரிந்ததாக முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அதே மகளை, இயற்கைக்கு புறம்பாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியதாக, அவனுக்கு எதிராக இரண்டாவது குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் 377C பிவிரின் கீழ், அக்குற்றச்சாட்டு நிரூப்பிக்கப்பட்டால், குறைந்தது ஐந்தாண்டுகள் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான சிறையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
கடந்த மே மாதம், நிபோங் தெபால் (Nibong Tebal) தாமான் ஸ்ரீ எமாசிலுள்ள (Taman Seri EMA’s), வீடொன்றில் அவன் அக்குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அவனை உத்தரவாததின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கவில்லை. இவ்வழக்கு விசாரணை ஜூலை 15-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.