Latestமலேசியா

பினாங்கு சட்டமன்றத்தில் பரபரப்பு: வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினருக்கு முதல்வர் மற்றும் ஆளுங்கட்சியினர் கடும் கண்டனம்

ஜோர்ஜ்டவுன், மே-13,பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தின் இன்றையக் கூட்டத்தொடர், அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் குறித்த விவாதத்தால் பரபரப்படைந்தது.

எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனலைச் சேர்ந்த பெனாகா உறுப்பினர் Mohd Yusni Mat Piah, இந்த விவகாரத்தைக் கிளப்பியபோது சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

​இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் சாவ் கோன் யோ மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தராஜூ ஆகியோர் எழுந்து கடும் கண்டனம் தெரிவித்தனர்.

எதிர்க்கட்சியினர் உண்மைக்குப் புறம்பாகவும், இந்துக்களின் மனம் நோகும்படியாகவும் பேசுவதாக குற்றம் சாட்டினர்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணனும் Yusni-யைச் சாடினார்.

​வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்களை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது என அவர் எச்சரித்தார்.

முறையான ஆதாரங்கள் இன்றிப் பேசுவது சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் என்றும், இது மக்களின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கையோடு தொடர்புடையது என்றும் குமரன் சுட்டிக்காட்டினார்.

​அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு, உள்ளூர் அதிகாரப்பூர்வ அமைப்புகள் மற்றும் நில அலுவலகம் ஒன்றிணைந்து ஒரு முறையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான தீர்வை எட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

​மக்களின் ஒற்றுமையே மாநிலத்தின் நிலைத்தன்மைக்கு முக்கியம் எனத் தெரிவித்த குமரன், சகிப்புத்தன்மையுடன் இந்தப் பிரச்னை கையாளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!