ஜோர்ஜ் டவுன், ஜூலை 24 – பினாங்கு, பட்டர்வொர்த், பங்கலான் சுல்தான் அப்துல் ஹலிம் முனையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரி பயணப் படகு ஒன்று நீரில் மூழ்கியது.
ஏற்கனவே சாய்ந்த நிலையில் காணப்பட்ட அந்த பெரி, இன்று அதிகாலை மணி மூன்று வாக்கில் நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
SPPP – பினாங்கு துறைமுக ஆணையத்திற்கு சொந்தமான அந்த பெரி, வெகு காலமாக அந்த முனையத்தில், கயிற்றால் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளை ; நேற்றிரவு வீசிய பலத்த காற்றில் கயிறு அறுந்து பெரி நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
அந்த பெரியை மீட்டு, அசல் நிலையில் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதே சமயம், தீயணைப்பு மீட்புப் படையினர், எண்ணை கசிவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
2021-ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் தேதி, பினாங்கில் நான்கு சக்கர வாகனங்களுக்கான பெரி சேவை நிறுத்தப்பட்டது.
பாதசாரிகளுடன், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளோட்டிகள் மட்டுமே தற்போது பெரி சேவையை பயன்படுத்த முடியும்.
அதனை தொடர்ந்து, பினாங்கு மாநிலத்தின் வரலாற்றை நிலைநிறுத்தும் வகையில், இதற்கு முன் அங்கு சேவையில் இருந்த பெரிய பெரிகளில் இரண்டு தஞ்சோங் சிட்டி மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வேளை ; இதர பெரிகள், அருங்காட்சியம், மிதவை உணவகம் அல்லது சுற்றுலா நோக்கத்துக்காக மாற்றியமைக்க அவை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.