தோக்யோ, ஜூன்-12, ஜப்பானில் பிரசவத்திற்கு போகும் முன் கணவருக்குக்காக ஒரு மாதத்திற்குத் தேவையான இரவு உணவுகளைச் சமைத்து ஐஸ் பெட்டியில் வைத்துச் சென்ற நிறைமாத கர்ப்பிணி பெண்ணின் செயல் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
மே 21 பிரசவத்திற்குப் பிறகு குறைந்தது ஒரு மாதம் தனது பெற்றோர் வீட்டிலேயே தங்க அப்பெண் முடிவெடுத்திருக்கிறார்.
ஆனால் தான் இல்லாத போது கணவர் சரியாக சாப்பிட மாட்டார் என்ற கவலையில், ஒரு மாதத்திற்கான இரவு உணவுகளை முன்கூட்டியே சமைத்து வைத்து விட்டதை தனது X தளத்தில் அப்பெண் பகிர்ந்துள்ளார்.
கணவர் மீது அவ்வளவு பாசமா என நெட்டிசன்கள் பலர் புல்லரித்த வேளை, அவர்களுக்கு இடையிலான பரஸ்பர அன்பு குறித்தும் நெகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆனால், மேலும் பலர் அவரைக் குறை சொல்லவும் செய்கின்றனர்.
இதென்ன அடிமைத்தனமான வாழ்க்கை என அவர்களில் சிலர் நேரடியாகவே கேட்டு விட்டனர்.
அதே சமயம், 9 மாத கர்ப்பிணி என தெரிந்திருந்தும் மனைவியின் மீது கரிசனம் இல்லையா என கணவர் மீது விமர்சனங்கள் பாய்கின்றன.
ஆசியாவில் கணவன்மார்கள் எந்த காலத்தில் சொந்தமாகச் சமைத்து சாப்பிட்டார்கள் என ஒரு நெட்டிசன் கிண்டலாக கருத்துப் பதிவிட்டுள்ளார்.