Latestமலேசியா

பிரதமருக்கு எழுதிய கடிதத்தினால் மார்ச் மாதம் சிறுமி ஷிவானி பள்ளிக்கு திரும்புகிறார்

சிரம்பான், ஜன 8 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து தாம் மீண்டும் பள்ளிப் படிப்பை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது குறித்து R. ஷிவானி பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளார். நாடற்ற பிரஜை என்ற நிலையினால் கடந்த ஒரு ஆண்டு காலமாக பள்ளிக்கு செல்ல முடியாத சூழ்நிலைக்கு உள்ளான 10 வயது சிறுமியான ஷிவானி வரும் மார்ச் மாதம் பள்ளிக்குத் திரும்பலாம் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஷிவானியும் அவரது குடும்பத்தினரும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். Shivani-யின் பெற்றோர் தங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை. அச்சிறுமிக்கு அவர்களது பெற்றோர் பிறப்பு பத்திரமும் எடுக்கவில்லை. 2013ஆம் ஆண்டு அவரது பெற்றோர் விவாகரத்து செய்துகொண்டதால் பிறப்பு பத்திரம் இல்லாத நிலையில் ஷிவானி நாடற்ற பிரஜை அல்லது ஆவணமற்ற நிலைக்கு தள்ளப்பட்டார். சிரம்பான், தேசிய வகை தாமான் ஸ்ரீ பாகி பள்ளி மாணவியான ஷிவானி மூன்றாம் வகுப்புக்கு மேல் தொடர்ந்து கல்வி பயில்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. பிறப்பு பத்திரம் இல்லாததால் கடந்த ஆண்டு 4ஆம் வகுப்பை ஷிவானி தொடர முடியவில்லை. இதனால் அவர் தமது பள்ளிப் படிப்பை தொடர முடியாத சூழ்நிலைக்கு உள்ளானார்.

ஷிவானி விவகாரத்திற்கு தாங்கள் தீர்வு கண்டு விட்டதோடு தமது வீட்டிற்கு அருகேயுள்ள பள்ளிக்கு மாறிச் செல்வதற்கும் உதவவிருப்பதாக நெகிரி செம்பிலான் கல்வித்துறையின் இயக்குனர் ரோஸ்லான் ஹுசின் தெரிவித்தார். அச்சிறுமி தனது படிப்பை தொடர்வதவற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. தேசிய பதிவுத்துறையில் அடையாள ஆவணங்கள் பெறுவதற்கு அவரது குடும்பத்தினர் செல்ல வேண்டும் என ரோஸ்லான் கூறினார். தனது ஒரே மகளான ஷிவானியின் கல்விப் பிரச்சனையை தீர்ப்பதில் கல்வி அமைச்சு காட்டிய அக்கறைக்கு 44 வயதுடைய ராஜேஸ்வரன் தமது நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும், தனது மகளின் எதிர்காலத்திற்கு உத்தரவாதம் பெறுவதற்கு “Pertubuhan Kebajikan Mesyarakat Bersatu”-ன் உதவியோடு தமது மகளுக்கு தேசிய ஆவணங்களை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை இருப்பதையும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!