Latestஉலகம்

பிறப்பு விகிதத்தை உயர்த்த பல்கலைக்கழகங்களில் ‘காதல் பாடத்தை’ வலியுறுத்தும் சீன அரசாங்கம்

பெய்ஜிங், டிசம்பர்-5, சீனாவில் தொடர்ந்து சரிந்து வரும் பிறப்பு விகிதத்தை தூக்கி நிறுத்தும் முயற்சியில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ‘காதல் பாடத்தை’ வலியுறுத்துமாறு அந்நாட்டரசு கேட்டுக் கொண்டுள்ளது.

கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், திருமண வாழ்க்கை, காதல், கருவுறுதல், குடும்பம் ஆகியவை குறித்து மாணவர்களிடத்தில் நேர்மறையான பார்வையை விதைப்பதற்கு அது அவசியமென, அதிகாரிகள் கூறுகின்றனர்.

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்கள், வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நுழைவதால், பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதில் அவர்களுக்குப் பெரும் பங்குண்டு.

ஆனால், சீன இளைஞர்கள் மத்தியில் காதல் மற்றும் திருமண வாழ்க்கைக் குறித்த அபிப்பிராயத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கூட, 57 விழுக்காட்டு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு காதலில் நாட்டமில்லை எனக் கூறியிருக்கின்றனர்.

காதலில் விழுந்தால், படிப்புக்கும் காதலுக்கும் எப்படி சரிசமமாக நேரத்தை ஒதுக்குவதென்ற குழப்பமே அதற்கு காரணமாம்.

காதல் மற்றும் திருமண பந்தம் குறித்து முறையான மற்றும் அறிவியல் பூர்வமான கல்வி இல்லாததால், உணர்ச்சிப்பூர்வமான உறவுகள் மீது இளையோர் தெளிவற்றப் புரிதலைக் கொண்டுள்ளனர்.

இதை இப்படியே விட்டால், எதிர்காலத்தில் நிலைமை மேலும் மோசமாகி விடும்.

எனவே, ஜுனியர் மாணவர்களுக்கு மக்கள்தொகை சார்ந்த அம்சங்கள் பற்றியும் சீனியர் மாணவர்களுக்கு நெருக்கமான உறவுகள் மற்றும் இரு பாலினத்தவருக்கிடையிலான தொடர்பு முறை குறித்தும் போதிக்கலாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உலக மக்கள் தொகையில் ‘ஆதிக்கம்’ செலுத்தி வந்த சீனா, தற்போது 1.4 பில்லியன் பேருடன் இரண்டாமிடத்திற்குப் பின்தள்ளப்பட்டிருப்பதே, அதன் பிறப்பு விகித சரிவுக்கு சான்றாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!