ஷா ஆலாம், ஏப்ரல் 20 – ஷா ஆலாம், புக்கிட் பண்டாராயாவில் உள்ள வீடமைப்புப் பகுதிகளில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அடிக்கடி காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
உணவு தேடி வெளியே வரும் காட்டுப் பன்றிகள், அங்குள்ள குப்பைத் தொட்டிகளை இழுத்துப் போட்டு கிளறுகின்றன.
வீட்டின் வெளியே குப்பைத் தொட்டியில் இருந்து உணவுக் கழிவுகளை காட்டுப்பன்றி சாப்பிடுவதைப் பார்த்த குடியிருப்பாளர் ஒருவர் அந்தக் காட்சியை தனது கைப்பேசியில் பதிவுச் செய்துள்ளார்.
குறிப்பாக Jalan Gunung Nuang U11/26 மற்றும் U11/32 சாலை பக்கமாக ஒரு பெரியக் காட்டுப் பன்றியும் சில குட்டிகளும் அடிக்கடி வந்துப் போவதாக புக்கிட் பண்டாராயா குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சொன்னார்.
முன்பெல்லாம் எப்போதாவது தான் அவற்றை பார்க்க முடியும்; ஆனால் இப்போது அடிக்கடி வந்துப் போகின்றன. பிற்பகலில் கூட சர்வ சாதாரணமாக அவை அங்கு நடமாடுவது குடியிருப்பாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக அவர் கூறினார்.
அவை புக்கிட் செராக்கா மற்றும் ஷா ஆலம் தேசிய தாவரவியல் பூங்காவுடன் இணைக்கப்பட்ட ஒரு தனியார் நிலத்திலிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
வீடமைப்புப் பகுதிக்குள் நுழைந்து உணவு தேடி குறுக்கும் நெடுக்குமாக அவை சுற்றித் திரிந்ததில் மோட்டார் சைக்கிளோட்டிகள் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவங்களும் உண்டு என குடியிருப்பாளர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து கருத்துரைத்த ஷா ஆலாம் மாநகர மன்ற (MBSA ) உறுப்பினர் Vincent Chow, காட்டுப் பன்றிகள் வீடமைப்புப் பகுதிகளில் நுழையா வண்ணம் 280 மீட்டர் நீளமுள்ள பாதையில் வேலியை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட தனியார் நில உரிமையாளருக்குத் தாம் கடிதம் எழுதியிருப்பதாகச் சொன்னார்.
அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகவும் Vincent கூறினார்.