Latestமலேசியா

புக்கிட் மெர்தாஜாம், சினார் செரியா குழந்தைகள் காப்பகத்திற்கு, மனிதவள அமைச்சர் சிறப்பு வருகை

புக்கிட் மெர்தாஜாம், டிசம்பர் 19 – புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் புக்கிட் மெர்தாஜாமிலுள்ள, குழந்தைகள் காப்பகத்திற்கு அண்மையில் வருகை புரிந்தார்.

அல்மாவிலுள்ள, சினார் செரியா (Sinar Ceria) காப்பகத்திற்கு வருகை புரிந்த சிம், அந்த காப்பகத்தின் தோற்றுனர் பாக்கியத்துடன் நேரத்தை செலவிட்டார்.

“அந்த காப்பகத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும், “மேடம் பாக்கியம்” எனக்காக பிரார்த்தனை செய்வார்” என சிம் தமது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

“அதே போல, இம்முறையும் எனது புதிய கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற அவரிடம் ஆசி கேட்டேன். அவர் தமிழில் பிரார்த்தனை செய்தாலும், அதனை கேட்கும் போது நிறைவாக உணர்கிறேன்” என சிம் குறிப்பிட்டுள்ளார்.

81 வயது பாக்கியம், வயது மூப்பு காரணமாக படுத்த படுக்கையாக உள்ளார்.

அவர் ஒரு போராளி. அனைவரும் ஓய்வு பெற விரும்பும் 61 வயதில், ஆதரவற்ற அல்லது வசதி குறைந்த குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளை பராமரிக்க முடிவுச் செய்தார். மூன்று பிள்ளைகளுடன் தொடங்கப்பட்ட அவரது காப்பகத்தில் தற்பொழுது 30 பிள்ளைகள் உள்ளனர். கடந்த 20 ஆண்டுகளில் குறைந்தது ஆயிரம் பிள்ளைகள், அவரது ஆதரவையும், அரவணைப்பையும் பெற்றுள்ளதை சிம் சுட்டிக்காட்டினார்.

பாக்கியத்தின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில், 2012-ஆம் ஆண்டு, பினாங்கு அரசாங்கம் அவரை கெளரவித்துள்ளது.

சீனார் செரியா இல்லத்திற்கு உதவும் வகையில், 40 ஆயிரம் ரிங்கிட் உதவித் தொகையை வழங்க தாம் இணக்கம் தெரிவித்ததாகவும் சிம் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!