
கோலாலம்பூர், ஏப்ரல்-26-சீர்திருத்தங்களை முன்னெடுக்கப் புதிய கட்சியைத் தொடங்குவதா அல்லது தற்போதைய நிலையிலேயே நீடிப்பதா என்பது குறித்து வரும் ஜூன் மாதம் முடிவெடுக்கப் போவதாக, டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு பேரணிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஃபிசி, இம்முடிவு ஒரு தனிப்பட்ட முடிவாக இருக்காது என்று கூறினார்.
தனது அரசியல் நண்பர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், இது நாடாளுமன்ற மற்றும் தொகுதி மட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அமைச்சரவையிலிருந்து விலகியப் பிறகு பி.கே.ஆர் தலைமைத்துவத்துடன் ரஃபிசிக்கு நிலவி வரும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்மையில் பண்டான் தொகுதி பி.கே.ஆர் தலைவர் பதவியிலிருந்து அவரை நீக்க எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்த போதிலும், கட்சித் தலைமைக்கும் அவருக்கும் இடையிலான உறவு சீராக இல்லை.
அரசாங்கத்திற்கான எதிரான ரஃபிஸியின் தொடர் விமர்சனங்களே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
என்றாலும், அதிகாரத்தின் மீது தமக்கு ஆசை இல்லை என்றும், உண்மையான மாற்றத்தையே தாம் விரும்புவதாகவும் ரஃபிஸி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜூன் மாதம் அவர் எடுக்கப்போகும் முடிவு மலேசிய அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது…



