Latestமலேசியா

புத்ராஜெயாவுக்கு செலுத்தும் வரியை விட அதிக நிதி பெரும்பாலான மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது – பிரதமர்

கோலாலம்பூர், ஜூன் 30: சில மாநிலங்கள் மத்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.

2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில், சிலாங்கூர் மற்றும் பினாங்கைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும், புத்ராஜெயாவுக்கு வரியாக செலுத்திய சராசரி தொகையை விட அதிக அளவிலான மத்திய அரசு ஒதுக்கீடுகளை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் பிரதமருக்கான கேள்வி நேரத்தின்போது பேசிய அன்வார், சிலாங்கூரும் பினாங்கும் நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களாக இருப்பதால் அதிக வருவாயை ஈட்டுகின்றன. அதனால் அவை செலுத்தும் வரியுடன் ஒப்பிடுகையில் பெறும் மத்திய அரசு செலவினம் குறைவாக இருப்பது இயல்பானது என்றார்.

அவர் வழங்கிய புள்ளிவிவரங்களின்படி, 2023–2025 காலகட்டத்தில் சிலாங்கூர் ஆண்டுக்கு சராசரியாக RM43.6 பில்லியன் வரி வருவாய் ஈட்டிய நிலையில், அங்கு மத்திய அரசு செலவிட்டது RM15 பில்லியன் மட்டுமே. பினாங்கு RM10.7 பில்லியன் வரி செலுத்திய நிலையில், மத்திய அரசு செலவினம் RM7.9 பில்லியன் ஆக இருந்தது.

இதற்கு மாறாக, கிளந்தான் RM946 மில்லியன் வரி மட்டுமே ஈட்டியிருந்தாலும், அந்த மாநிலத்தில் மத்திய அரசு RM8.9 பில்லியன் செலவிட்டுள்ளது.

கெடா RM3.7 பில்லியன் வரி வருவாய் ஈட்டிய நிலையில் RM9.5 பில்லியன் மத்திய ஒதுக்கீடு பெற்றுள்ளது.

திரெங்கானு மாநிலத்தின் வரி வருவாய் RM1.2 பில்லியன் (பெட்ரோலிய வருவாயுடன் RM2.2–RM2.4 பில்லியன்) என்றாலும், மத்திய அரசு அங்கு RM7.8 பில்லியன் செலவிட்டுள்ளது.

அதேபோல், பெர்லிஸ் RM419 மில்லியன் வரி செலுத்திய நிலையில் RM2.2 பில்லியன் மத்திய நிதி பெற்றுள்ளது. ஜொகூர் சுமார் RM14 பில்லியன் வரி செலுத்திய நிலையில் RM16 பில்லியன் மத்திய அரசு செலவினத்தை பெற்றுள்ளது.

வறுமை ஒழிப்பு, பள்ளி வசதிகள் மேம்பாடு, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தொடர்ந்து அதிக நிதி ஒதுக்கி வருவதாகவும் அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!