
ஈப்போ, ஜூலை-29-பேராக், Taman Star பகுதியில் உள்ள ஒரு வீட்டினுள் அத்துமீறி நுழைந்து திருட முயன்றதாக நம்பப்படும் 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் மரணமடைந்தார்.
அவ்வீட்டின் பராமரிப்பாளருடன் நிகழ்ந்த மோதலுக்குப் பிறகு ஏற்பட்ட blocked artery எனும் இருதயத் தமனி அடைப்பே அவர் உயிரிழந்ததற்குக் காரணம் என்பது சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
அந்நபர் மற்றொருவரும் சேர்ந்து Jalan Building Societyயிலு உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்ததாக பேராக் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Mohd Alwi Zainal Abidin தெரிவித்தார். ஜன்னலைத் திறந்து உள்ளே நுழைந்த போது, வீட்டின் பராமரிப்பாளர் அவர்களைத் தடுக்க முயன்று மோதலில் ஈடுபட்டுள்ளார்.
இருவரில் ஒரு சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், மற்றொருவர் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சவப் பரிசோதனையில், அவர் இருதயத் தமனி அடைப்பு காரணமாகவே மரணமடைந்தார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டதாக Mohd Alwi அறிக்கையொன்றில் தெரிவித்தார்.
அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 457-ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அக்குற்றத்திற்கு ஐந்து முதல் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
அதேவேளை வேண்டுமென்றே காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காகத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழும் விசாரணை நடத்தப்படுகிறது. அக்குற்றத்திற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது இவற்றில் ஏதேனும் இரண்டு தண்டனைகள் விதிக்கப்படலாம்.
இவ்வேளையில் தலைமறைவாக இருக்கும் மற்றொரு சந்தேக நபரைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.



