
போர்னியோ, அக்டோபர் 8 – போர்னியோ தீவில் காட்டுத் தீயால் ஏற்பட்ட கடுமையான புகைமூட்டத்தைத் தடுக்கத் தவறியதாகக் கூறி, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) மற்றும் அதிகாரிகள் மீது பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேற்கு கலிமந்தான் (Kalimantan) மகாணத்திலுள்ள பொந்தியானாக் (Pontianak) நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கின் முதல் விசாரணை நடைபெற்றது. பழங்குடியின மக்களின் அமைப்பான AMAN-ன் உள்ளூர் பிரிவு உள்ளிட்ட நான்கு தரப்பினர் கடந்த மாதம் இந்த வழக்கைத் தாக்கல் செய்தனர். அதிபர் பிரபோவோ மற்றும் மேற்கு கலிமந்தான் ஆளுநர் உள்ளிட்ட 10 பேர் வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
காட்டுத் தீ மற்றும் புகைமூட்டம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதுடன், சுவாசப் பிரச்சினைகளால் நூற்றுக்கணக்கானோர் மருத்துவ உதவியை நாடியுள்ளனர். மேலும், கடுமையான புகைமூட்டத்தால் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத் தீ பிரச்சினையைச் சமாளிக்க அரசு தவறியுள்ளதாகவும், இது “மிகப்பெரிய அலட்சியம்” என்றும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட விரிவான நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக, புகைமூட்டப் பிரச்சினையை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.



