
புதுடெல்லி, அக்.08- இந்தியாவில் பாட்னாவிலிருந்து லக்னோ நோக்கிச் சென்ற இண்டிகோ விமானமொன்றை, 17,000 அடி உயரத்தில் மின்னல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து அவ்விமானம் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறங்கியது. அச்சம்பவத்தில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது.
104 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களுடன் சென்ற விமானம், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு எட்டு நிமிடங்களுக்கு முன்னதாகவே Chaudhary Charan Singh அனைத்துகக விமான நிலையத்தில் தரையிறங்கியது. பயணிகள் மற்றும் விமானக் குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கும்போது ஆலங்கட்டி மழையுடன் கூடிய மோசமான வானிலை காணப்பட்டது. சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டதாக விமான நிறுவனம் கூறியது. அவ்விமானத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சேவையில் ஈடுபட அனுமதி கிடைத்த பின்னரே அது மீண்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் Guwahatiயில் இருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானம், Kempegowda அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கும்போது அதன் வால் பகுதி ஓடுபாதையில் மோதியது. பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலையே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது.



