
கோலாலம்பூர், அக்டோபர் 8 – செராஸ் பகுதியில் தனது நாட்டைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க நபரை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 30 வயது மியான்மர் நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த நபர் வயிற்றுப் பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை 10 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, செராஸ் மாவட்ட காவல் தலைமையக குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் நேற்று மதியம் 12 மணியளவில் தாமான் மலூரியிலுள்ள (Taman Maluri) ஒரு வளாகத்தில் சந்தேக நபரைக் கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு கத்தரிக்கோல் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வேலை இல்லாதவர் என்றும், அவருக்கு முன் குற்றப் பதிவு எதுவும் இல்லை என்றும் கோலாலம்பூர் காவல்துறை தலைவர் டத்தோ ஃபாடில் மார்சஸ் (Datuk Fadil Marsus) தெரிவித்தார். இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது. அவரைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.



