Latestமலேசியா

போலி டான்ஸ்ரீ விருது விற்பனை – NGO தலைவர் உட்பட அறுவர் கைது

கோலாலம்பூர், டிச 8 – போலியான கூட்டரசு அரசின் டான்ஸ்ரீ விருதை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட அரசு சாரா அமைப்பின் தலைவர் உட்பட அறுவரை ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த கும்பல் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருவதாக நம்பப்படும் நிலையில் முறையான நடைமுறைகளைக் கடைபிடிக்காமல் குறுக்கு வழியில் விருதுகளைப் பெற விரும்பிய அறுவரை இந்த கும்பல் இதுவரை ஏமாற்றியுள்ளது.

குறுக்கு வழியில் விருதுகளைப் பெற முடியும் என வாடிக்கையாளர்களை நம்ப வைப்பதற்காக இக்கும்பல் அரசாங்க நிறுவனம் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளது.

‘டத்தோ‘ விருது பெறுவதற்கு 150,000 ரிங்கிட்டும், ‘டத்தோஸ்ரீ‘ விருது பெறுவதற்கு 250,000 ரிங்கிட்டும் வசூலிக்கப்பட்ட வேளை, ‘டான்ஸ்ரீ‘ விருதைப் பெற விரும்பிய ஒருவருக்கு 2 லட்சம் ரிங்கிட்டை அக்கும்பல் ஏமாற்றியுள்ளது.

போலியான கூட்டரசு விருதுகளை விற்பனை செய்ததன் மூலம் அக்கும்பல் இதுவரை 20 லட்சம் ரிங்கிட் வரை சம்பாதித்துள்ளதாகக் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விசாரணை தொடர்பில் இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட ஐவரை தேடி வருவதாக SPRM கூறியது.

முப்பது முதல் ஐம்பது வயது வரையிலான இரு பெண்கள் உள்ளிட்ட அந்த அறுவரும் கடந்த மாதம் 30ஆம் தேதிக்கும், இம்மாதம் 6ஆம் தேதிக்கும் இடையே தலைமையகம் (SPRM) மற்றும் மலாக்காவில் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!