Latestமலேசியா

போலீசாரால் துரத்திச் செல்லப்பட்டதில் வைரலான பெஸ்ஸா ஓட்டுனர் அன்பரசனுக்கு; ஒரு மாதச் சிறை, பத்தாயிரம் ரிங்கிட் அபராதம்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 8 – 28 போலீஸ் வாகனங்கள் துரத்திச் சென்ற பெஸ்ஸா கார் ஒட்டுனருக்கு ஒரு மாதச் சிறையும், பத்தாயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து, பெட்டாலிங் ஜெயா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அபாயகரமான முறையில் காரை செலுத்தியது, அரசாங்க ஊழியரின் பணிக்கு இடையூறாக இருந்தது ஆகிய குற்றங்களுக்காக, 27 வயது பி. அன்பரசன் எனும் அந்த ஆடவனுக்கு மாஜிஸ்திரேட் அந்த தண்டனையை விதித்தார்.

அன்பரசனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனை இன்று தொடங்கி அமலுக்கு வரும் வேளை; அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில் அவன் மேலும் எட்டு மாதங்களுக்கு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அவனது வாகனம் ஓட்டும் உரிமமும் ஐந்தாண்டுகளுக்கு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை, பின்னிரவு மணி 1.30 வாக்கில், பெட்டாலிங் ஜெயா, ஜாலான் உத்தாராவில், தனக்கும் இதர வாகனமோட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவன் தனது பெஸ்ஸா காரை செலுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.

அதே நாள், அரசாங்க ஊழியரின் பணிக்கு இடையூறை ஏற்படுத்திய குற்றச்சாட்டும் அவன் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இதனிடையே, அன்பசனும், அவனது 21 வயது மனைவி எம்.ரிஷ்லானியும், அபாயகர ஆயுதங்களை வைத்திருந்ததாக மற்றொரு குற்றச்சாட்டையும் எதிர்நோக்கியுள்ளனர்.

கூடுதல் நிபந்தனைகளுடன், ஐயாயிரம் ரிங்கிட் உத்தரவாதத் தொகையில் அவ்விருவரையும் இன்று விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அந்த வழக்கு விசாரணை ஜனவரி 16-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.

முன்னதாக, பெட்டாலிங் ஜெயாவிலிருந்து, பெஸ்ஸா கார் ஒன்று 28 போலீஸ் வாகனங்களால் சைபர்ஜெயா வரையில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு துரத்திச் செல்லப்பட்ட காணொளி ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த பெஸ்ஸா காரை செலுத்திய ஓட்டுனருக்கு எதிராக 11 பழைய குற்றப்பதிவுகள் இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!