கோலாலம்பூர், ஜூலை 18 – மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர், வான் அஹ்மாட் பைசால் வான் அஹ்மாட் கமால், மக்களவை கூட்டத்தில் கலந்து கொள்வதிலிருந்து, ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இன்று தொடங்கி அந்த தடை அமலுக்கு வருகிறது.
MAHB – மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னணியில் செயல்பட்ட சூத்தரதாரி தொடர்பான தகவல்கள் அடங்கிய மொட்டை கடிதம் வைரலான விவகாரம் தொடர்பில், வான் பைசாலுக்கு, மக்களவைத் தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல் அந்த தடையை இன்று விதித்தார்.
வான் பைசால், நம்பகத்தன்மை உறுதிச் செய்யப்படாத அந்த மொட்டை கடிதம் குறித்து அனுமதி இன்றி மக்களவையில் பேசியதோடு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள EPF உயர் அதிகாரி ஒருவரின் பெயரையும் பகிரங்கமாக அறிவித்தது, கண்டனத்தை பெற்றது.
முன்னதாக, மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர், தமது தற்காப்பு வாதத்தை முன்வைக்க மக்களவை தலைவர் வாய்ப்பு வழங்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதால், மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.