புத்ராஜெயா, செப்டம்பர் -1, மியன்மார் நாட்டில் மனித கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக தேசிய முன்னணி காலத்து துணையமைச்சரான டத்தோ Dr மஷித்தா இப்ராஹிம் (Datuk Dr Mashitah Ibrahim) மீது எழுந்துள்ள புகார் தொடர்பில், விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அதில் விரிவான விசாரணை நடத்துமென தாம் நம்புவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்தார்.
மலேசியாவைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் அவரின் கணவரும் மியன்மாரில் அச்சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக, இந்தோனீசிய ஊடகமொன்றில் முன்னதாக செய்தி வெளியானது.
இதையடுத்து அது குறித்து மலேசிய ஊழல் தடுப்பாணையம் (MACC) விசாரிக்க வேண்டுமென, மலேசிய அனைத்துலக சமூக மனிதநேய அமைப்பு (MHO) வலியுறுத்தியிருந்தது.
தமது பெயர் அதில் இழுக்கப்பட்டதை அடுத்து அந்த அரசு சாரா அமைப்புக்கு எதிராக போலீசில் புகார் செய்த டத்தோ மஷித்தா, தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என எச்சரித்தார்.
60 வயது மஷித்தா, 2008- 2013 வரைக்குமான தேசிய முன்னணி அரசாங்கத்தில் இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணையமைச்சராக இருந்துள்ளார்.