Latestஉலகம்

மன்னர் சார்லஸ் உருவப் படம் பொறித்த பண நோட்டுகள் பிரிட்டனில் காட்சிக்கு வருகின்றன

லண்டன், பிப்ரவரி 28 – பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவம் பொறிக்கப்பட்ட பண நோட்டுகளை முதன் முறையாக நேரில் பார்க்கும் வாய்ப்பு அந்நாட்டு மக்களுக்கு புதன்கிழமை கிடைக்கவிருக்கிறது.

லண்டனில் உள்ள இங்கிலாந்து மத்திய வங்கியின் தலைமையகப் பொருட்காட்சி சாலையில் அவை காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

5 பவுண்ட், 10 பவுண்ட், 20 பவுண்ட், 50 பவுண்ட் என தொடக் கட்டமாக அச்சிடப்பட்டுள்ள அந்த போலிமர் பணநோட்டுகள், வரும் ஜூன் ஐந்தாம் தேதி மக்கள் உபயோகத்திற்காக புழக்கத்திற்கு வரவிருக்கின்றன.

நோட்டுகளின் முன் பக்கத்தில் சார்லஸின் உருவப்படமும், பாதுகாப்பு சாளரத்தில் அவரின் கேமியோவும் இடம் பெற்றுள்ளன.

மற்ற படி, ஏற்கனவே உள்ள பண நோட்டுகளில் இருந்து இப்புதிய நோட்டுகள் மாறாமல் இருக்கின்றன.

தமது உருவம் பொறித்த பண நோட்டுகளின் வடிவமைப்பை, 2022-ஆம் ஆண்டு பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த சில மாதங்களில் மன்னர் சார்லஸ் அங்கீகரித்து இறுதிச் செய்தார்.

மூன்றாம் சார்லசின் முகம் பதித்த நாணயங்கள் அண்மையில் தான் அங்கு புழக்கத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

1960-களில் இருந்து எலிசபெத் அரசியாரின் உருவம் பொறித்த பண நோட்டுகளே அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கி புதிய மன்னரின் உருவம் பொறித்த பண நோட்டுகளுடன் பிரிட்டன் மக்கள் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளவிருக்கின்றனர்.

ஏற்கனவே ராணி எலிசபெத் உருவம் பொறித்த பண நோட்டுகள் புழக்கத்தில் இருந்தாலும், படிப்படியாக இந்த புது நோட்டுகள் புழக்கத்துக்கு கொண்டு வரப்படவுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!