கோலாலம்பூர், டிசம்பர்-14, மலேசியக் கொடியை உட்படுத்தியத் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டு விட்டால் போதாது; மாறாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மலேசிய ஒலிம்பிக் மன்றமான MOM-மின் உதவித் தலைவர் டத்தோ மெகாட் சு’ல்கார்னாயின் ஒமார்டின் (Datuk Megat Zulkarnain Omardin) அவ்வாறுக் கூறியுள்ளார்.
BWF எனப்படும் அனைத்துலக பூப்பந்து சம்மேளனத்தின் உலக இறுதித் தொடர் போட்டியின் முதல் ஆட்டத்தில், நாட்டின் லீ சி’ ஜியா (Lee Zii Jia) அணிந்திருந்த ஜெர்சியில் தேசியக் கொடி தலைக்கீழாக அச்சடிக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
இதையடுத்து, சீ’ ஜியாவின் நிதி ஆதரவாளரான Victor Malaysia அத்தவற்றுக்காக மலேசிய மக்களிடமும் சீ’ ஜியாவிடமும் மன்னிப்புக் கோரி வருத்தமும் தெரிவித்துள்ளது.
அது குறித்து பேசிய போது டத்தோ சு’ல்கானாயின் அவ்வாறு சொன்னார்.
இப்படி நடப்பது இதுவொன்றும் முதன் முறையல்ல; பல முறை நடந்து விட்டது.
ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்டு விட்டு சம்பந்தப்பட்டவர்கள் தப்பித்துக் கொள்வதாக அவர் சொன்னார்.
முன்னதாக, தைவானின் ச்சௌ தியென் ச்சென்னை (Chou Tien Chen) எதிர்த்து விளையாடிய போது, லீ சி’ ஜியா அணிந்திருந்த ஜெர்சியின் முன்புற இடப்பக்கத்தில் தலைக்கீழாக ஒட்டப்பட்டிருந்த மலேசியக் கொடி, தொலைக்காட்சி நேரலையில் தெளிவாகத் தெரிந்தது.
இதனால் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்தன.