Latestமலேசியா

மலேசியாவில் அதிகமான இளம் வயதினர் இருதய நோய் காரணமாக உயிர் இழக்கின்றனர்

கோலாலம்பூர், நவ 29 – மலேசியர்களில் அதிகமானோர் இளம் வயதிலேயே இருதய நோய் காரணமாக உயிர் இழக்கின்றனர். அவர்களில் பலர் 30 மற்றும் 69 வயதுக்கிடையே உயிரிழப்புக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் குறைந்த வயதிலேயே மரணத்தை ஏற்படுத்தும் பிரதான நோய்களில் ஒன்றாக இருதய நோய் திகழ்வதாக தேசிய இருதய சிகிச்சை மையத்தின் இருதய நிபுணரான டாக்டர் அப்துல் ஆரிப் ஷபாருதீன் தெரிவித்திருக்கிறார். பல ஆண்டுகளாகவே மலேசியர்களிடையே மரணத்தை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருதய நோய் திகழ்வதாக அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அண்மைய ஆண்டு காலமாக இளம் வயதினர் அதுவும் திருமணம் செய்யாமல் இருக்கும் இளைஞர்கள் அதிகமாக இருதய நோயினால் மரணம் அடைவதாக அவர் கூறினார்.

20 வயதுக்கு அப்பாற்பட்டு 30 வயது தொடங்குவதற்கு முன்னதாக மலேசியர்களில் பலர் இருதய நோயின் பாதிப்பினால் சிகிச்சைக்கு வருகின்றனர் என டாக்டர் அப்துல் ஆரிப் தெரிவித்தார். மலேசியர்களின் சராசரி ஆயுள் 75 வயது என இதற்கு முன் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அண்மைய காலமாக இருதய நோய் மற்றும் அது தொடர்பான மாரடைப்பினால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 30 மற்றும் 69 வயதுக்குட்பட்டவர்களில் கடந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 95,266 பேர் மாரடைப்பு காரணமாக மரணம் அந்துள்ளதாக 2023 ஆம்ஆண்டின் மரணங்களுக்கான காரணம் குறித்த புள்ளி விவர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மருத்துவ ரீதியில் பதிவான மரணங்களில் 18.4 விழுக்காடு இருதய நோய் தொடர்பானவை. அதற்கு அடுத்த நிலையில் பக்கவாதம் , கோவிட் 19 தொற்று மற்றும் போக்குவரத்து விபத்துக்கள் என மலேசிய புள்ளிவிவரத்துறை தகவல் வெளியிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!