Latestமலேசியா

மலேசிய அரசு பொதுச் சேவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, டான் ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் 100-வது வயதில் காலமானார்

கோலாலம்பூர், ஜன 21 – மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் காலணித்துவ காலத்தில் 1952ஆம் ஆண்டில் கோலாலம்பூர் நகராட்சி தேர்தலில் மற்றும் பங்சார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் மலேசிய இந்திய அரசியல்வாதி மற்றும் மலேசியாவில் அரசுப் பொதுச் சேவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்ற டான் ஶ்ரீ தேவகி கிருஷ்ணன் நேற்று காலமானார். அவர் தமது 100 ஆவது வயதில் இறந்ததை அவரது பேரனும் தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சருமான ரமணன் ராமகிருஷ்ணன் உறுதிப்படுத்தினார். வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு 8 மணியளவில் தேவகி கிருஷ்ணன் இறந்தார் என சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தெரிவித்தார்.

மலேசிய அரசியலிலும் இந்திய சமூகத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தலைவராக திகழ்ந்ததோடு தமது வாழ்நாளை மக்களுக்காக அர்ப்பணித்தவர் தேவகி கிருஷ்ணன் என ரமணன் கூறினார். அவரின் இழப்பு தங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் பெரிய இழப்பாக கருதவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1955 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பங்சார் நகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேவகி கிருஷ்ணன் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றார், தாம் இறக்கும்வரை ம.இ.காவில் நீண்டகாலம் சேவையாற்றிய உறுப்பினர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. 1975 ஆம் ஆண்டில் தேவகி கிருஷ்ணன் முயற்சியில் ம.இ.காவில் மகளிர் பிரிவு தோற்றுவிக்கப்பட்டு அப்பிரிவிற்கு நாடு முழுவதிலும் உறுப்பினர்களை திரட்டுவதிலும் அவர் முங்கிய பாங்காற்றியதோடு அப்பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார்.

நாட்டின் முக்கியத் தலைவர்களும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!