
தானா மேரா, ஏப்ரல்-21-கிளந்தான், தானா மேராவில் உள்ள Felda Kemahang 1 பகுதியில், மாடு திருடர்களைத் தடுக்க முயன்ற 42 வயது நபர் ஒருவர் முகத்தில் சுடப்பட்டு காயமடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரான Khairi Amri, நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு கும்பல் மாடுகளைத் திருட முயல்வதைக் கண்டு உதவிக்காகக் கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் அக்கும்பலைச் சூழ்ந்து பிடிக்க முயன்றனர்.
அப்போது அக்கும்பலில் இருந்த ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ஒரு தோட்டா Khairi-யின் கன்னத்தில் பாய்ந்தது.
இதனைத் தொடர்ந்து 5 அல்லது 6 பேர் கொண்ட அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றது.
அவர்கள் எல்லை தாண்டிய கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த 8 ஆண்டுகளாகக் கிராம மக்களின் மாடுகளைப் பராமரித்து வரும் ஃபெல்டா குடியேற்றக்காரரான Khairy, உடனடியாக தானா மேரா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதை போலீஸ் உறுதிப்படுத்தியது.
மலேசிய-தாய்லாந்து எல்லைப் பகுதியில் செயல்படும் இந்தக் கடத்தல் கும்பலைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.



