கோத்தா பாரு, ஏப்ரல்-1, கிளந்தான், கோத்தா பாருவில் MRSM பள்ளியொன்றின் ஆசிரியர், சிறார் மீதான பாலுணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது தொடர்பில், சக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட சாட்சிகளை போலீஸ் விசாரணைக்கு அழைத்திருக்கிறது.
பாதிக்கப்பட்டவன் என நம்பப்படும் மாணவனிடம் இருந்து புகார் கிடைத்திருப்பதால், தாங்கள் விசாரணையில் இறங்கியுள்ளதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர்
Muhamad Zaki Harun தெரிவித்தார்.
தொலைப்பேசி உரையாடல்கள், WhatsApp உரையாடல்கள் என
சம்பந்தப்பட்டவரின் கைப்பேசி உள்ளடக்கம் முழுவதையும் போலீஸ் பரிசோதித்திருக்கிறது.
இதையடுத்து, 1998-ஆம் ஆண்டு தொடர்பு-பல்லூடகச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 500-வது பிரிவின் கீழ் விசாரணை நடைபெற வேண்டிய அவசியம் இருப்பதாக போலீஸ் கருதுகிறது.
புகார்தாரரின் குற்றச்சாட்டு உண்மையா என்பதை கண்டறிய நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை அவசியம் என அவர் சொன்னார்.
விசாரணை நடைபெறுவதால் யூகங்களை எழுப்பி இடையூறு விளைவிக்க வேண்டாம் என பொது மக்களையும் Muhammad Zaki கேட்டுக் கொண்டார்.
அதே சமயம் அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர், போலீசை தொடர்புக் கொண்டு உதவுமாறும் அவர் சொன்னார்.
சிறார் மீது பாலியல் ரீதியாக நாட்டம் கொண்டவராக அறியப்படும் ஆசிரியர் ஒருவர், இன்னமும் தும்பாட்டில் அதே பள்ளியில் படித்துக் கொடுப்பதாக, நெட்டிசன் ஒருவர் மார்ச் 28-ஆம் தேதி சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால், விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட அந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மார்ச் 30-ஆம் தேதி MARA உறுதிபடுத்தியிருந்தது.