Latestமலேசியா

மாபெரும் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 11 பேர் கைது, 8 சொகுசுக் கார்களும் பறிமுதல்

கோலாலம்பூர், மார்ச் 18 – புகையிலை, மதுபானம் மற்றும் சிகரெட் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் 11 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC கைதுச் செய்திருக்கின்றது.

அவர்களிடம் இருந்து Lamborghini, Lexus, Mercedes-Benz என 60 லட்சம் ரிங்கிட் பெருமானமுள்ள 8 ஆடம்பரக் கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

30 முதல் 50 வயது வரையிலான அவர்களில் பொதுச் சேவைத் துறை ஊழியர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோரும் அடங்குவர்.

மேலும் மூவர், நிறுவனங்களின் உரிமையாளர்கள்; அவர்களில் இருவர் டத்தோ பட்டத்தைக் கொண்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடிச் சோதனையில் அவர்கள் கைதாகினர்.

உள்நாட்டு வருமான வரி வாரியம் LHDN, பேங் நெகாரா ஆகியவற்றுடன் இணைந்து, MACC-யின் கருப்புப் பண தடுப்புப் பிரிவு அச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது.

கைதான முக்கியப் புள்ளிகள், கடத்தலுக்கு பிரச்னை வராமல் பார்த்துக் கொள்வதற்காக, அமுலாக்க அதிகாரிகளுக்கு மட்டும் 80 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேல் வாரி இறைத்திருக்கின்றனர்.

கணக்கில் வராத கருப்புப் பண நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ளது.

உரிமம் பெற்ற கடன் சேவை நிறுவனங்கள், நாணையப் பரிமாற்றச் சேவை நிறுவனங்கள் மூலமாக ‘ஆவி’ நிறுவன கணக்குகளைப் பயன்படுத்தி அவர்கள் பணச்சலவையில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.

இந்த மாபெரும் கடத்தல் கும்பலால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு 400 million ரிங்கிட்டுக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!