புது டெல்லி, மே 2 – இந்தியா தலைநகர் புதுடெல்லியிலுள்ள, டஜன் கணக்கான பள்ளிகள் நேற்று உடனடியாக காலி செய்யப்பட்டன.
மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, அப்பள்ளிகளில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
எனினும், சோதனையின் போது “ஆட்சேபனைக்குரிய பொருள் எதுவும்” கண்டறியப்படவில்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர்.
புது டெல்லி மற்றும் அதை ஒட்டிய புறநகர் பகுதியான நொய்டாவிலுள்ள, 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால், போலீஸ் படை வீரர்கள், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையின் உதவியோடு, பள்ளி வளாகத்தை சோதனையிடும் காட்சிகளையும், தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோர்கள், பள்ளிகளுக்கு வெளியில் காத்திருக்கும் காட்சிகளையும் உள்நாட்டு தொலைக்காட்சிகள் ஒளிப்பரப்பின.
அதனால் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
அந்த வெடிகுண்டு மருட்டல் தொடர்பில் போலீசார் இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால், மாணவர்களும், பெற்றோர்களும் பீதியடைத்தேவையில்லை எனவும், பொருமைக்காக்குமாறும் உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
புது டெல்லியிலுள்ள, பள்ளிகளுக்கு வெடிகுண்டு மருட்டல் விடுக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களில் அதுபோன்ற மருட்டல்கள் விடுக்கப்பட்டுள்ள வேளை ; இறுதியில் அவை வெறும் புரளிதான் என்பது உறுதிச் செயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.